கப்பம் கோரி தமிழ் இளைஞனை கடத்தி காணாமல்போகச் செய்த கடற்படை அதிகாரி கைது!

கொழும்பில் கப்பம்கோரி தமிழ் இளைஞர் ஒருவரைக் கடத்தி காணாமல் போகச் செய்தவர் என்ற குற்றச்சாட்டின்பேரில் நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கடைபடை அதிகாரியொருவரைக் கைதுசெய்துள்ளனர்.

கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த இளைஞனே 2008ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கப்பம்கோரப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின்பேரில் நேற்றையதினம் கடற்படை அதிகாரியான லெப்.கொமாண்டர் அனில் தம்மிகவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்தனர்.

இவரது கைதுக்கு கடற்படையினரின் பலத்த எதிர்ப்பை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சந்திக்க நேரிட்டது. தற்போது குறித்த கடற்படை அதிகாரியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வான் ஒன்றுடன் கடத்தப்பட்ட குறித்த இளைஞன், வெலிசறை கடற்படை முகாமில் தடுத்துவைத்திருந்த சமயம் காணாமல் போகச் செய்யப்பட்டார்.

இளைஞனின் வான், பாகம் பாகமாக பிரித்து, விற்பனை செய்யப்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டது.

அவ்வாறு பிரிக்கப்பட்டு விற்கப்பட்ட வாகனத்தின் எஞ்சிய சில பகுதிகள், வெலிசறை கடற்படை முகாமில் இருந்து மீட்கப்பட்டன.

அதேவேளை கடத்தப்பட்ட தமிழ் இளைஞனின் குடும்பத்தினரிடம் இருந்தும், இந்த கடற்படை அதிகாரி கப்பம் பெற்றுள்ளார் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

Related Posts