யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்களின் படுகொலை தொடர்பில் அவர்களின் பெற்றோர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை செய்தமை தொடர்பில் முல்லைத்தீவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் வைத்து கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி இரவு யாழ். பல்கலைக்கழக 3ஆம் வருட கலைப்பீட மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் முல்லைத்தீவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத பட்சத்தில் அவரை திறந்த பிடியாணை ஊடாக கைது செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.