முல்லைத்தீவு – மல்லாவி நகரில் மாவீரன் பண்டாரவன்னியனின் உருவ சிலை அவமானப்படுத்தும் அளவிற்கு அதன் வடிவமைப்பு காணப்படுவதாக வடமாகாண சபையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 82ஆவது அமர்வு நேற்றைய தினம் மாகாணசபை பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக இந்த விடயத்தை சபைக்கு கொண்டுவந்தார்.
மல்லாவி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு கீழ் பண்டாரவன்னியன் என எழுதியதால் மட்டுமே அது பண்டாரவன்னியனின் சிலை என மற்றவர்களுக்கு தெரியும் அளவிற்கு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
உதாரணமாக எதியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளில் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் தோற்றத்தில் அதன் வடிவமைப்பை கொச்சைப்படுத்தும் அளவில் அமைத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இது மாவீரன் பண்டாரவன்னியனின் மாவீரத்தையும், தமிழர்களின் வீரத்தையும் கொச்சைபடுத்தும் ஒரு செயல் என்றும் அவர் அதிருப்தி வெளியிட்டார்.