வடக்குக் கிழக்கு மக்களின் அபிலாசைகளை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் அழுத்திக் கூற எதிர்வரும் 21ஆம் நாள் மட்டக்களப்பில் நடைபெறும் எழுக தமிழ் நிகழ்வில் அனைத்து மக்களையும் அணிதிரளுமாறு தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான வசந்தராசா அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையினால் எதிர்வரும் 21ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வு தொடர்பாக நேற்றையதினம் ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள கூட்டுறவுச்சபை மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் தமது பிரச்சனைகளை, அபிலாசைகளை தமது தலைவர்கள்தான் சம்பந்தப்பட்டோரிடம் எடுத்துச்சொல்லவேண்டுமென்றும் அவற்றை நிறைவேற்றவேண்டுமெனவும் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இப்போது அந்த நிலமை மாறிக்கொண்டு வருகின்றது.
இதுவரை காலமும் தலைமைகளுக்குப் பின்னால்தான் மக்கள் சென்றுகொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது காலம் மாறி மக்கள் முன்னே செல்ல தலைவர்கள் பின்னே செல்லவேண்டிய நிலமை ஏற்பட்டிருக்கின்றது.
இந்த எழுக தமிழ் நிகழ்வினூடாக வடக்குக் கிழக்கு இணைக்கப்படவேண்டும். தங்களைத் தாங்களே நிர்வகிக்கும் சமஷ்டிமுறையிலான தீர்வு வேண்டும். வடக்குக் கிழக்கிலே இடம்பெற்று வருகின்ற திட்டமிட்ட குடியேற்றங்களும் பௌத்த மயமாக்கலும் நிறுத்தப்படவேண்டும்.
மேலும், விசாரணைகளின்றி நீண்ட காலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணவேண்டுமெனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.