முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கு தீர்ப்பு தொடர்பில் தனக்கும் பிரச்சினை உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டமா அதிபருக்கு தனது அதிருப்தியை தெரிவித்ததை அடுத்து மேன்முறையீட்டிற்கான நடவடிக்கையை அவர் ஆரம்பித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம் கொழும்பு – நாரஹேன்பிட்டியிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் படுகொலைத் தீர்ப்பு குறித்து ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
“இந்த தீர்ப்பு விடயத்தில் பிரச்சினைகள் எனக்கும் உண்டு. ரவிராஜ் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளார். அவரது மெய்க்காவலர்களும் தாமாகவே சுட்டுக்கொண்டனர் என்ற நிலைப்பாட்டையே இந்த தீர்ப்பு மூலம் காணமுடிகிறது. இதேவேளை, சட்டமா அதிபர் தற்பொழுது இதுதொடர்பில் மேன்முறையீட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்” – என்றார்.