பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை கோரி நிற்கின்றோமே தவிர பழிவாங்க இல்லை

யுத்தத்தின்போது கட்டளைகளை வழங்கியவர்களே குற்றங்களுக்கு பொறுப்புக்கூறவேண்டுமென தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை கோரி நிற்கின்றோமே தவிர பழிவாங்க முயற்சிக்கவில்லையென குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்களின் கருத்தறியும் செயலணியின் இறுதி அறிக்கை நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் வெளியிடப்பட்டதையடுத்து அங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளை நியமிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளமையை சுட்டிக்காட்டிய சம்பந்தன், இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாக உள்ளதென ஜனாதிபதி நினைப்பதால் இவ்வாறு தெரிவித்திருக்கலாம் எனவும் எனினும், விசாரணை பொறிமுறையானது நம்பகத்தன்மை வாய்ந்ததென கருதி ஏற்றுக்கொள்வதற்கு பாதிக்கப்பட்ட தரப்பினர் மறுப்பார்களாயின், என்ன நோக்கத்திற்காக விசாரணை பொறிமுறை அமைக்கப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேறாதெனவும் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இராணுவத்தினர் பீதியடைந்துள்ளனர் என குறிப்பிட்ட சம்பந்தன், யுத்த காலத்தில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சரணடைந்தவர்களை கொலை செய்த குற்றங்களுக்கு இராணுவத்தினரே பொறுப்புக்கூற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts