யாழில் பல பெண்களிடம் தகாத முறையில் நடப்பதற்கு முயற்சித்த பொலிஸ் புலனாய்வாளர் ஒருவருக்கு எதிராக யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ். நகர் முனியப்பர் வீதியிலுள்ள விற்பனை நிலையமொன்றில் பணியாற்றும் இளைஞன் ஒருவரை நேற்று கைதுசெய்து அழைத்துச் சென்ற 45 வயது மதிக்கத்தக்க குறித்த பொலிஸ் புலனாய்வாளர், அவரை யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் ஒப்படைத்துச் சென்றதாகவும், தான் மீண்டும் வரும் வரை குறித்த இளைஞனை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் குறித்த இளைஞனின் தாய் சென்று இளைஞனிடம் விசாரித்தபோது, குறித்த தாயின் தொலைபேசி இலக்கத்தை தருமாறு பொலிஸ் புலனாய்வாளர் கேட்டதாகவும் அதனை கொடுக்க மறுத்த காரணத்தினாலேயே இளைஞனை கைதுசெய்து அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து இன்று (புதன்கிழமை) காலை குறித்த இளைஞன் விடுவிக்கப்பட்டதோடு, சம்பந்தப்பட்ட தாயும் மகனும் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட புலனாய்வாளர் இதற்கு முன்னரும் பல பெண்களிடம் தொலைபேசி இலக்கங்களை பெற்றுக்கொண்டு தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார் என தெரிவிக்கப்படும் நிலையில், யாழ். பிரதி பொலிஸ்மா அதிபரால் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.