வடக்கு மாகாண முதலமைச்சரை சில தவறான வழிநடத்தல் காரர்களே கனடா நாட்டிற்கு அழைப்பதாகவும் அவரை அங்கு செல்லவேண்டாமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கனடா நாட்டின் மார்க்கம் நகரில் நிகழ்வுகளை நடாத்துபவர்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கனடாவிற்குச் செல்லவுள்ள நிலையில், அந்நிகழ்வுகளை நடாத்துபவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் எனவும் அவரை அங்கு செல்லவேண்டாம் எனவும் கடிதம் அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில், மார்க்கம் நகரில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு தமிழரசுக் கட்சியினதோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களோ அழைக்கப்படாதநிலையில், குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளும் செயலானது கூட்டமைப்பினரைப் பலவீனப்படுத்தும் செயல் என்பதால் அங்கு செல்லவேண்டாமெனவும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பயணம் திட்டமிட்டபடி நடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் பிரித்தானிய நகரில் கையொப்பமிட்ட இரட்டை நகர ஒப்பந்தத்தினால் யாழ்ப்பான நகருக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப்போவதில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.