“மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தங்கியிருந்த அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்தை எனக்கு வழங்குவதாக வெளிவரும் செய்தி தொடர்பில், எனக்கு எதுவும் தெரியாது” என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் இல்லம், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு வழங்கப்படவுள்ளதாக வெளிவந்த செய்தி தொடர்பில் வினவியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது,
“மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தங்கியிருந்த அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்தை, எனக்கு வழங்குவதாக இதுவரை யாரும் எனக்குத் தெரிவிக்கவில்லை. மேலும், இது தொடர்பில் வெளிவரும் செய்திகள் தொடர்பில், எனக்கு எதுவும் தெரியாது” என்றார்.
மறைந்த பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தான் இறக்கும் வரையில், அரசாங்க உத்தியோகபூர்வ இல்லமொன்றை பயன்படுத்தி வந்தார். அவரது மறைவின் பின்னர் அந்த இல்லத்தை, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரா. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக பதவி ஏற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், அவருக்கு உரிய இல்லம் ஒன்று வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.