அக்காவுக்கு ஏதாவது நடந்தால் குண்டுவைக்கவும் தயங்கமாட்டேன் என கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவருக்கு இனந்தெரியாத நபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி காவல்துறையில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, அண்மையில் நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் பிரதமர் ஆகியிருப்பார் என கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த செய்தியானது ஆங்கிலப் பத்திரிகையில் கிளிநொச்சி ஊடகவியலாளர் நிபோஜன் என்ற பெயரில் வெளியிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த ஊடகவியலாளருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட இனந்தெரியாத நபர் ஒருவர், குறித்த செய்தியை ஊடகவியலாளர் திரிபுபடுத்தி எழுதிவிட்டதாகவும், சிலவேளைகளில் அமைச்சர் (அக்கா) தவறாக உச்சரித்திருந்தாலும் ஊடகவியலாளர்கள் அதனைத் திருத்தி சரியான முறையில் வெளியிட்டிருக்கவேண்டுமெனவும், இச்செய்தியினால் அக்காவுக்கு (அமைச்சருக்கு) நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
எனவே இந்தச் செய்தியினால் அக்காவுக்கு(அமைச்சருக்கு) ஏதேனும் நடந்தால் தான் கிளிப் சார்ச் (குண்டு வைக்க) பண்ணக் கூட தயங்க மாட்டேன் எனக்கு எல்லா ஆயுதங்களும் பயன்படுத்தத் தெரியும் எனவும் கடும் தொனியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளாா். அத்தோடு தனக்கு அனைவருடனும் தொடா்புகள் இருக்கிறது என்றும் எல்லா இடங்களிலும் தனக்கு ஆட்கள் இருக்கின்றாா்கள் என்றும் மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதனையடுத்து ஊடகவியலாளர் நிபோஜன் கிளிநொச்சி காவல்துறையில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.