கோரிக்கைகள் முன்வைக்கப்படும் பட்சத்தில், மாதவிடாய் ஏற்படும் காலத்தில், பெண்களுக்கு ஒரு நாள் விடுமுறை வழங்குவற்கான யோசனை அடங்கிய அமைச்சரவைப் பத்திரத்தை, அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் தான் தயாராக உள்ளதாக, மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.
இதுபோன்றதொரு நடைமுறை, சீனாவிலும் அமுலில் உள்ளதாகத் தெரியவந்துள்ளதை அடுத்து, அந்த முறைமையை இலங்கைக்கும் கொண்டுவருவதற்கு யோசனைகளை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“வேலைகளுக்குச் செல்லும் பெண்கள், இதுபோன்ற காலத்தில் வலியைத் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில், பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது நலன் கருதியே, இவ்வாறான யோசனையொன்று முன்வைக்கப்படவுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்றதொரு யோசனை, இதுவரைக்கும் எவராலும் முன்வைக்கப்படவில்லை என்றும், இந்த யோசனை முன்வைக்கப்பட்ட பின்னர், நடைமுறையில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் விவாதிக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.