சிறுவர் வைத்தியசாலை அமைக்க இடம் வழங்குமாறு கோரிக்கை!

2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கமைய யாழ்ப்பாணத்தில் சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு மத்திய அரசாங்கத்தினால் 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர் வைத்தியசாலையானது போதனா வைத்தியசாலையுடன் இணைந்ததாகவே அமைக்கப்படவேண்டுமென்பதால், யாழ். போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அருகில் 1.5 ஏக்கர் காணி தேவைப்படுவதாகவும், வடபகுதி சகல பகுதிமக்களும் இலகுவில் போக்குவரத்து செய்யக் கூடிய நகரின் மத்திய பகுதியில் காணி உள்ளவர்கள், நன்கொடையாளர்கள் காணியை தந்துதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவேண்டுமெனவும், இல்லாவிட்டால் குறித்த நிதியானது, வேறு பகுதிக்கு திருப்பப்படும் வாய்ப்புக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது கொழும்பிலும், கண்டியிலும் மாத்திரமே சிறுவர் வைத்தியசாலை காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts