வீதிகளில் குப்பைகளை கொட்டினால் ஆயிரம் ரூபா தண்டம்

யாழ்.நகர மக்கள் தமது வீடுகளில் நாளாந்தம் சேரும் கழிவுகளை உக்கக்கூடிய கழிவுகள், உக்காத கழிவுகள் என தரம் பிரித்து வைப்பதன்மூலமே அவற்றை அகற்றுவது இலகுவாக இருக்குமென யாழ் மாநகரசபை ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்தார்.

யாழ் மாநகர சபையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினுடைய ஏற்பாட்டில் மாநகர சபைகள் உள்ள இடத்தில் திண்மக்கழிவுகளை தரம் பிரித்து அகற்றுகின்ற செயற்திட்டம் நவம்பர் மதம் 2ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அந்தவகையில் நாடளாவிய ரீதியில் 23 மாநகர சபைகள் யாழ் மாநகர சபையும் ஒன்று என்றவகையில் நாமும் இந்தச் செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

அந்த வகையில் பாசையூர், அரியாலை, நாவாந்துறை, நல்லூர், யாழ் நகரப்பகுதி, வண்ணார் பண்ணை, குருநகர் ஆகிய 7 வலயங்களிலும் இவற்றை ஆரம்பித்திருந்தோம். நவம்பர் மாதம் முதலாம் திகதி 7 வலயங்களிலும் திண்மக் கழிவுகளை தரம்பிரித்து அகற்றுகின்ற சிறிய முயற்சியுடன் ஆரம்பித்திருந்தோம். இதற்கு மக்களிடம் ஆதரவு அதிகமாகக் காணப்பட்டது.

திண்மக் கழிவு அகற்றல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை யாழ் மாவட்டத்தில் உள்ள 7 பாடசாலைகளில் ஆரம்பித்திருக்கின்றோம். எதிர்வரும் 2017 ஆம் ஆண்டில் திண்மக் கழிவுகள் அகற்றுகின்ற பணியை முழு வீச்சில் அமுல்படுத்தவுள்ளோம்.

திண்மக் கழிவு அகற்றும் செயற்பாட்டில் தண்டப்பணம் அறவிடும் முறையினையும் அறிமுகப்படுத்தியிருக்கின்றோம். இச்செயற்பாட்டிற்கு சுற்றுப்புறச் சூழல் பொலிஸார் தங்களுடைய முழுமையான பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள்.

உக்கக்கூடிய திண்மக் கழிவுகளை காக்கைதீவில் உள்ள மீள்சுழற்சி மையத்திற்கு அனுப்புகின்றோம். அங்கு வீரியம் என்னும் மீள்சுழற்சி உரம் உற்பத்தியாக்கப்படுகின்றது. மொத்தமாக இதுவரைக்கும் 8,000 கிலோகிராம் பசளை உற்பத்தியாக்கப்பட்டுள்ளது. அவற்றினைப் பொதுமக்களுக்கு மானிய விலையில் விற்பனை செய்கின்றோம்.

உணவு உற்பத்தி உரிமையாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் ‘லஞ்சீற்”இனை பாவிக்காது இயற்கையான முறையில் வாழையிலைகளைப் பயன்படுத்துமாறு கூறியிருந்தோம். நாடளாவிய ரீதியில் 20 மைக்கிறோன் தடிப்புக்குக் குறைவான பொலித்தீன்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன.

வீதிகளில் திண்மக் கழிவுகள் கொட்டுகின்றபோது உக்கக்கூடியவையும் உக்காத கழிவுகளும் ஒன்றுடன் ஒன்று கலந்துவிடுகின்றன. இதனால் திண்மக் கழிவுகளை தரம் பிரிப்பது என்பது கடினமான காரியமாகக் காணப்படுகின்றன. இதனால் கழிவுகளைத் தரம் பிரிப்பவர்கள் பின்னிற்கின்றார்கள்.

தரம் பிரிக்காத திண்மக் கழிவுகளை வீடுகளுக்குச் சென்று பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். இதனாலேயே வீதிகளில் குப்பைகளைக் கொட்டுகின்றனர். வீதிகளில் குப்பைகள் போடுவதற்கு ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டு வருகின்றது. இதுவரைக்கும் 40 நபர்களுக்கு தண்டப்பணம் அறவிட்டுள்ளோம்.

சில நபர்கள் இறந்த செல்லப்பிராணிகளையும் வீதிகளில் வீசிவிடுகிறார்கள். இதனால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது. இறந்த செல்லப்பிராணிகளின் உடல்களை சுகாதாரமான முறையில் அகற்ற வேண்டும்.

மேலும் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் வீடுகளில் பணம் பெற்றே கழிவுகளை அகற்றுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இது உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அத்தொழிலாளர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts