வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஒத்துழைக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கல்முனையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
அந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய மாவை சேனாதிராஜா, கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் மக்கள் தேவை என்பதற்காக முதலமைச்சர் பதவியினை விட்டுக்கொடுத்தோம் என குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் மக்கள் உணர்வோடும் இணக்கத்தோடும் ஒத்துழைக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கலந்துரையாடியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த விடயத்தில் முஸ்லிம் கட்சிகளின் பதிலை கூட்டமைப்பு எதிர்ப்பார்த்துள்ளது என கூறியுள்ளார்.
அதேவேளை வட்டுக்கோட்டை தீர்மானத்தினை கூட்டமைப்பு தற்போது கோரவில்லை மாறாக பூரண அதிகாரத்தை கொண்டிருக்கும் சமஷ்டி முறையிலான தீர்வினையே கோரி நிற்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமஷ்டி தத்துவத்தின் அடிப்படையிலே அதிகாரங்கள் பகிரப்பட்டு இணைந்த வடக்கு கிழக்கில் ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்துகின்ற அளவிற்கு தீர்வு கிடைக்க வேண்டும் தந்தை அன்று கூறியதாகவும் மாவை சேனாரதிராஜா குறிப்பிட்டார்.
அதற்கு இணங்கவே தமிழீழ விடுதலைப் புலிகளும் ஜனநாயக ரீதியாக செயற்பட்ட தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழர் விடுதலை கூட்டணியும் அனைத்தும் புரிந்துணர்வுடன் செயற்பட்டதாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.