சுதந்திரமான தனித்துவம் மற்றும் பலதரப்பட்ட அதியுயர் நன்னெறி தரங்களை கொண்ட தொழில் நிபுணத்துவமும் பொறுப்புணர்வும் அமைந்த பலதரப்பட்ட பரந்த அடிப்படையிலான தகவல்கள் மற்றும் யோசனைகளை மக்களுக்கு தெரிவிக்கும் பொறுப்புவாய்ந்தவை ஊடகங்களாகும். பொதுமக்களுக்கான ஒன்றுகூடலில் சிறந்த ஜனநாயக அடிப்படையிலான கருத்துக்களை கலந்துரையாடுதல், இலங்கையில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பி பேணிப் பாதுகாப்பதற்கான செய்முறையாகும். இதற்கென அரசாங்கம் பயன்தரக்கூடிய செய்தி ஊடக கலாச்சாரத்தை பெற்றுக் கொடுப்பதற்கான சுற்றாடலை உருவாக்கும் கடற்பாட்டினை கொண்டுள்ளது. இது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தொழில் நிபுணத்துவ தரத்தினையும் செயற்பாட்டினையும் மற்றும் ஒழிவு மறைவற்ற செய்தி ஊடகத்தின் நம்பகத்தன்மையை நிலைபெறச் செய்வதற்கான செய்தி மற்றும் தகவல் துறை வளமாக அமைந்திருக்கும்.
இதற்கென அரசாங்கம் ‘பொதுமக்களின் நம்பிக்கையை மீள கட்டியெழுப்புதல்’ என்ற தலைப்பில் ஊடக அபிவிருத்தி துறைக்கான முழுமையான மதிப்பீட்டை ஏற்படுத்தக்கூடிய சூழலை கொண்ட அறிக்கையை தயாரித்துள்ளது. இவ்வறிக்கையில் இலங்கையில் ஊடக தொழிற்துறை மற்றும் தொழில் ரீதியான நிபுணத்துவத்தின் மதிப்பீடும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டில் உலக பத்திரிகை சுதந்திர தினத்தன்று ஊடக சீர்த்திருத்தத்தில் சம்பந்தப்பட்டுள்ள பல தரப்பினரும் தயாரித்த இவ்வறிக்கை கௌரவ பிரதம மந்திரியிடம் கையளிக்கப்பட்டது. ஊடகத்துறையின் பலதரப்பட்ட தரப்பினர் கலந்துரையாடல் மூலம் பெருமளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட யுனெஸ்கோ ஊடக அபிவிருத்திக்கான பகுப்பாய்வு சமிஞ்ஞைகளின் அடிப்படையில் இவ்வறிக்கையின் உள்ளடக்கம் அமைந்துள்ளது.
அதேபோல் அண்மையில் நடைபெற்ற இலங்கையின் ‘தகவல் அறியும் உரிமைச்சட்டம் மற்றும் ஊடகத்துறை மறுசீரமைப்பு’ தொடர்பான சர்வதேச மாநாட்டின் போது ஊடகத்துறையில் காணப்படும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றதுடன், அது தொடர்பான முக்கிய சிபார்சுகள் பலவும் முன்வைக்கப்பட்டன.
இந்த அறிக்கையின் சில பிரதான சிபார்சுகள் இதற்கான சட்டவாக்கங்களை உருவாக்குவதற்கான செயற்பாட்டினை பிரதிபலிக்கின்றது. இவ்வறிக்கையில் பிரதிபலிக்கும் ஊடகத்துறை அபிவிருத்திக்கான பிரதான கருத்துக்கள் தொடர்பாக அரசாங்கம் ஊடகத்துறையில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் கலந்துரையாடி ஊடக தொழிற்துறையில் சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்குதல் மற்றும் ஊடகங்களின் சுய தணிக்கை செயற்பாடுகளை பலப்படுத்துவது பற்றியும் கலந்துரையாட விரும்புகின்றது.
பத்திரிகைத்துறை சுதந்திரத்திற்கு சட்ட ரீதியிலான அங்கீகாரத்தை வழங்குவதுடன் செய்தி ஊடகங்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் இன்றி தன்னிச்சையாக செய்தி மற்றும் தகவல்களை திரட்டுவதற்கு ஏதுவாக 1979ம் ஆண்டின் 5ம் இலக்க இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தை இரத்து செய்தவற்கும் அரசாங்கம் தயாராக இருக்கின்றது. செய்தி ஊடகங்களுக்கு தொழில் ரீதியிலான சட்ட விதிகளை ஏற்படுத்தும் சுயாதீனம் பெற்ற ஒர் அமைப்பை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் தயாராக உள்ளது.
எனவே, இதற்கான சட்ட மூலத்தை தயாரிப்பதற்கு சம்பந்தப்பட்ட அமைப்புக்களின் கருத்துக்களை கேட்டறிய விரும்புகின்றது.
01. ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகங்களின் உரிமையை அங்கீகரித்தல் (a) செய்தி மற்றும் தகவல்களை சேகரித்து அதனை வெளியிடுதல் (b) பொது விவகாரங்களில் யதார்த்தபூர்வமான நெறியான தகவல்களை வெளியிடுதல் மற்றும் (c) பொது மக்களின் கருத்தை வெளியிடுவதற்கான செயற்பாட்டுக்கு பங்களிப்பை வழங்குதல்.
02. சட்ட ரீதியிலான செய்தி மற்றும் தகவல்களை திரட்டும் செய்தி ஊடகத்தின், ஊடகவியலாளரின் நடவடிக்கைகளுக்கு வேண்டுமென்றே முட்டுக் கட்டைகளை விதிப்பவர்களை தண்டித்து ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தல்.
03. தமக்கு தகவல் கொடுத்தவரின் பெயர்களை வெளியிடாமல் இருக்கும் உரிமையை பயன்படுத்தும் ஊடகவியலாளர்களை பாதுகாத்தல்.
04. செய்தி ஊடக நிர்வனங்களில் பணிப்புரியும் ஊடகவியலாளர்களுக்கு செய்திகளை பெற்றுக் கொடுப்பவர்களுக்கு தடைவிதித்தல் அல்லது அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுத்தலை தடை செய்தல், பொதுமக்களால் விரும்பும் தகவல்கள் அவை சட்ட ரீதியிலான இரகசிய தகவல்களாக இருக்காத பட்சத்தில் அவற்றை வெளியிடுவதற்கான தடைகளை முற்றாக நீக்குதல்.
05. அங்கீகரிக்கப்பட்ட தொழில் ரீதியிலான நன்னெறி செயற்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படுத்தக்ககூடிய வகையில் செய்திகளை வெளியிட மறுப்பு தெரிவித்த ஒரு பிரதான ஆசிரியருக்கு அல்லது ஓரு ஊடகவியலாளருக்கு சட்ட விரோதமான தடைகளை விதித்தல் அல்லது சேவையில் இருந்து நீக்கும் செயற்பாடுகள் சட்ட விரோதமாக்கப்படும்.
06. செய்தி ஊடக தரத்துக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய சர்வதேச நிபுணத்துவ தொழில் நெறிகளுக்கு ஏற்புடைய சுயாதீனமான பேரவை ஒன்றை அமைத்தல்.
இங்கு உத்தேசிக்கப்பட்ட சுயாதீன பேரவை, அங்கீகரிக்கப்பட்ட ஊடக நன்னெறி செயற்பாடுகளை வேண்டுமென்றே மீறக்கூடிய வகையில் சுய தணிக்கையை செயற்படுத்த தவறும் அமைப்புக்களை மேற்பார்வை செய்து தண்டிக்கக் கூடிய ஒரு நிருவாக இயந்திரமாக அமையும். தகவல் அறியும் ஆணைக்குழுவைப் போன்று இப்பேரவையும் அமைக்கப்படும். இப்பேரவையின் திறமைமிக்க உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பகுதியினரை ஊடகங்களே தெரிவு செய்யும். அதன் மூன்றில் ஒரு பகுதியினரை சிவில் சமூக அமைப்புக்கள் தெரிவு செய்யும்.
உத்தேச இப்பேரவையின் தனித்துவத்திற்கு உத்தரவாதம் அளிக்கக் கூடிய வகையில் இதன் மீது பொது மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடியதாக ஒரு நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவரை நீதிசேவை ஆணைக்குழு, இலங்கை சட்டதரணிகள் சங்கத்தின் ஆலோசனையுடன் தெரிவு செய்து அவரை ஏனைய ஜனநாயக நாடுகளின் சம்பிரதாயங்களிற்கு அமைவாக பேரவையின் தலைவராக நியமித்தல். அரசியலமைப்பு சபையின் யோசனைக்கு அமைவாக பாராளுமன்ற தேர்தல் ஒன்றின் மூலம் மாத்திரம் நீக்கப்படும் வகையில் ஏற்பாடுகள் உள்ளடக்கப்படுவதால் இச்சபையின் உறுப்பினர்கள் பாதுகாக்கப்படுவர்.
உத்தேச இப்பேரவையின் செயற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள்
ஊடகவியலாளர்கள் சங்கங்கள், ஆசிரியர்களின் அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் ஆலோசனையுடன் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தொழில் நன்னெறி செயற்பாடுகளுக்கு அமைவிலான நடைமுறை ஏற்படுத்தப்படும்.
a. பேரவை நடைமுறைப்படுத்தியுள்ள சட்ட நெறிகளுக்கு அமைய செய்தி ஊடக அமைப்புக்கள் செயற்படுகின்றனவா என்பதை கண்காணித்தல்.
b. பேரவை நிறைவேற்றியுள்ள நன்னெறிகளுக்கு மாறாக செயற்பட்டிருப்பதாக கிடைக்கப்படும் முறைப்பாடுகள் சம்பந்தமாக விசாரணை நடாத்தி அந்த முறைப்பாடுகள் பற்றி தீர்மானங்களை எடுத்தல்.
c. நன்னெறிகளுக்கமைய செய்தி ஊடக அமைப்புக்கள் செயற்படுகின்றனவா என்பதை தெரிந்து கொள்வதற்காக பொது மக்களுடன் கலந்துரையாடி மதிப்பீடு செய்தல்.
d. செய்தி ஊடக அமைப்புக்களுக்கு எதிரான மான நஷ்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மத்தியஸ்த சபையாக செயற்படுதல்.
e. செய்தி ஊடக அமைப்புக்களை பதிவு செய்து, செய்தி ஊடகங்கள் பற்றிய தகவல் தரவுகளை சேமித்தல்.
f. பயிற்சியளித்தலுக்கு தேவையான ஆவணங்களை தயாரித்தல் மற்றும் நெறியான முறையில் ஊடக நன்னெறிகளை கடைப்பிடித்தல் போன்றவற்றை உள்ளடக்கக் கூடிய வகையில் ஒத்துழைப்புடன் பயிற்சிநெறிகளை ஒழுங்கு செய்தல்.
g. தகவல் அறியும் ஆணைக்குழுவிற்கு இருக்கும் அதே வகையான அதிகாரங்கள் இப்பேரவைக்கும் இருக்கும். விசாரணைகளை நடாத்துதல் மற்றும் பேரவையின் தீர்மானங்களுக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு வாய்ப்பளித்தல் போன்ற அதிகாரங்களும் இதில் உள்ளடக்கப்படும்.
h. பேரவையின் ஒழுக்க நெறிகளுக்கு மாறாக செயற்படும் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அல்லது ஒரு ஊடகவியலாளனின் நடவடிக்கையை அங்கீகரிக்காமல் சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தல் மற்றும் செய்த குற்றத்தை எடுத்துரைத்து கடிந்து கொள்ளுதல்.
i. அவசியம் ஏற்பட்டால் அல்லது பொது மக்களின் நன்மைக்கு என்று கருதினால் பேரவை தான் எடுத்த சில முடிவுகளை செய்தி ஊடகங்களின் மூலம் அச்சிடுவதற்கு அல்லது ஒலி, ஒளிபரப்பு செய்வதற்கு முடியும்.
j. ஊடக நன்னெறி செயற்பாடுகள் தொடர்பாக தகவல் ஊடக அமைப்புக்களின் நிர்வாக பீடத்துக்கும் ஊழியர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் அதில் மத்தியஸ்தம் செய்யும் அதிகாரத்தை பேரவை பயன்படுத்தலாம்.
இந்த உத்தேச சட்ட மூலம் சகல செய்தி ஊடகங்கள் குறிப்பாக அச்சு மற்றும் ஒலி, ஒளி ஊடகங்களை உள்ளடக்கும். இதனுடன் இணையத்தளங்கள் ஊடான செய்தி ஊடகங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கக் கூடியதாக அமைந்திருக்கும்.
பேரவையின் தீர்மானங்களுக்கு அமைவாக செயற்படாத எந்தவொரு செய்தி ஊடக அமைப்பும் ஒரு குற்றச் செயலை செய்ததாக கருதப்படும். அந்த குற்றச்செயல் தொடர்பாக விசாரணை செய்யும் நீதிமன்றம் ஒன்றின் மூலம் அந்த ஊடக அமைப்புக்கு ஒரு அபராதத்தை விதிப்பதற்கும் சட்டம் இடமளிக்கின்றது. அது போன்றே சட்ட ரீதியாக செய்திகளை மற்றும் தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு முட்டுக்கட்டை போடுதல் மற்றும் ஊடகவியலாளர் எவரிடம் இருந்து செய்தியை பெற்றார் என்பதை பற்றி கட்டாயப்படுத்தி கேட்பதும், ஒழுக்க நெறியை மீறி, செயற்பட மறுக்கும் ஊடகவியலாளரை தண்டிப்பதற்கு எடுக்கும் முயற்சிகளும் ஒரு நீதிமன்றத்தில் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கும்.
சகல ஊடக அமைப்புக்களும் அவற்றின் உரிமையாளர்களும் பிரசுர அமைப்புக்கள், ஊடகவியலாளர் சங்கங்கள், அமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் இந்த யோசனைக்கு கருத்து தெரிவிக்க விரும்பும் பிரஜைகள் அனைவரிடம் இருந்தும் கருத்துக்களை அரசாங்கம் கேட்டறிய விரும்புகின்றது.
தயவு செய்து இவ்விடயம் தொடர்பான உங்களுடைய கருத்துக்களை (எழுத்து மூலம்) எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் கீழ்வரும் முகவரிக்கு அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பணிப்பாளர் நாயகம்
அரசாங்க தகவல் திணைக்களம்
(அமைச்சின் செயலாளருக்குப் பதிலாக)
இல. 163,
கிருலபனை மாவத்தை, கொழும்பு – 05
Email – ranga@dgi.gov.lk
Fax: 0112514753
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சு