ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்க சிறுநீரக நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர்களின் சர்வதேச அமைப்பினால் விசேட சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சிறுநீரக நோயை கட்டுப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட சேவை நடவடிக்கைகளை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு காலி முகத்திடல் ஹோல்பேஸ் ஹோட்டலில் விசேட மருத்துவர்களின் சர்வதேச கூட்டமைப்பு நேற்று ஏற்பாடு செய்த நிகழ்வில் ஜனாதிபதிக்கு சிறுநீரக நோய்களுக்காக விசேட வைத்திய நிபுணர்களின் சர்வதேச அமைப்பின் தலைவர் பேராசிரியை அடீரா லெவின் இந்த விருதினை வழங்கினார்.
இலங்கையிலுள்ள ஆதரவற்ற சிறுநீரக நோயாளர்களின் நலன்களுக்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் செயற்திட்டத்துக்கு இந்த விருது பெரும் பலமாகும் என்பதனால் அனைத்து இலங்கை மக்கள் சார்பிலும் சிறுநீரக நோய் தொடர்பான மருத்துவ நிபுணர்களின் சர்வதேச அமைப்புக்கு பாராட்டுக்களைத் தெரிவிப்பதாக நிகழ்வில் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டிலுள்ள ஆதரவற்ற ஏழை மக்கள் இரண்டு தசாப்தங்களுக்கு கூடுதலான காலமாக முகங்கொடுத்துள்ள இந்த அனர்த்தத்திலிருந்து அவர்களை மீட்பதற்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாகவும் அப்பயணத்துக்கு அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கையின் சிறுநீரக நோய்த்தடுப்புக்காக சர்வதேச ரீதியில் நல்கிவரும் பங்களிப்பை பாராட்டி பேராசிரியர் அடீரா லெவினிற்கும் சிறுநீரக நோய்தடுப்புக்காக மேற்கொண்டுவரும் பங்களிப்பைப்பை பாராட்டி விசேட வைத்திய நிபுணர் திலக் அபேசேக்கர, வைத்தியர் ஜோர்ஜ் ஏப்ரஹம், சிறுநீரக நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவெல ஆகியோருக்கும் ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மஹிந்த சமரசிங்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஜோன் அமரதுங்க, அர்ஜுன ரணதுங்க ஆகியோர் உள்ளிட்ட ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ அபேகோன் மற்றும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப் ஆகியோர் கலந்துகொண்டனர்.