இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் முச்சதம் விளாசி சாதனை படைத்துள்ளதோடு டெஸ்ட் வரலாற்றில் அதிக ஓட்டங்களை குவித்து இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது
தனது முதல் சதத்தையே முச்சதமாக மாற்றியுள்ளார் கருண் நாயர்.
கருண் நாயர் 381 பந்துகளில் 4 சிக்சர், 32 பவுண்டரிகளுடன் 300 ஓட்டங்களை விளாசினார்.
மேலும் ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமன் ஆகியோரின் அதிகபட்ச ஓட்டங்களையும் முந்தியுள்ளார்.
மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே முச்சதம் அடித்து கருண் நாயர் சாதனை படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியுடனான இறுதி டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 759 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை இடைநிறுத்தி கொண்டது.
இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் இந்திய அணி பெற்றுகொண்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக இது பதிவானது
சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் இடம்பெற்று வரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 477 ஓட்டங்களை குவித்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
மொயீன் அலி 146, பேர்ஸ்டோ 49, ரஷித் 60, டொவ்சன் 66 ஓட்டங்களை விளாசினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 2ஆம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ஓட்டங்களை எடுத்திருந்தது.
ராகுல் 30, பார்திவ் 28 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 152 ஓட்டங்களை சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தது.
பார்திவ் 71 ஓட்டங்களை எடுத்து (112 பந்து, 7 பவுண்டரி) மொயீன் பந்துவீச்சில் பட்லர் வசம் பிடிபட்டார்.
அடுத்து வந்த புஜாரா 16, கோஹ்லி 15 ஓட்டங்களுடன் அரங்கு திரும்ப, இந்தியா 211 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய லோகேஷ் ராகுல் தனது 4வது சதத்தை பூர்த்தி செய்தார்.
ராகுல் – கருண் நாயர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 161 ஓட்டங்களை சேர்த்தது. கருண் அரை சதம் அடிக்க, இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 199 ஓட்டங்களை எடுத்து (311 பந்து, 16 பவுண்டரி, 3 சிக்சர்) துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 391 ஓட்டங்களை குவித்துள்ளது.
கருண் 71 ஓட்டங்கள், முரளி விஜய் 17 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். கைவசம் 6 விக்கெட் இருக்க, இந்தியா இன்னும் 86 ஓட்டங்கள் பின்தங்கியுள்ள நிலையில் நேற்று 4ஆவது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
இதில் இந்திய வீரர்கள் இங்கிலாந்து பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இந்திய அணியில் கருண்நாயர் முச்சதம் விளாசினார்.
கருண் நாயர் 381 பந்துகளில் 4 சிக்சர், 31 பவுண்டரிகளுடன் 300 ஓட்டங்களை விளாசினார். மேலும் அஸ்வின், ஜடேஜா அரைசதம் விளாசினார். இதனையடுத்து இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 759 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை இடைநிறுத்தி கொண்டது. இதன் மூலம் இந்திய அணி 282 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணி சாதனை
டெஸ்ட் இன்னிங்சில் அதிக ஓட்டங்களை குவித்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது. 726 ஓட்டங்களை கடந்து பழைய சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது.
2009ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்திய அணி 726 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இன்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் 759 ஓட்டங்களை எடுத்ததன் மூலம் இந்த சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது.