கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், பதிவுசெய்யப்பட்ட மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை, 636,106ஆல் குறைவடைந்துள்ளதாக, போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்தது.
போக்குவரத்துத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஆண்டறிக்கையிலேயே, அந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டில் 668,907 மோட்டார் வாகனங்கள் புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட போதும் 2016ஆம் ஆண்டில், 32,801 மோட்டார் வாகனங்கள் மாத்திரமே புதிதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக, அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கையே இவ்வருடம் அதிகளவில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் இது 22,225ஆக இவ்வருடம் காணப்படுகின்ற போதிலும், கடந்த வருடம் 370,889 ஆகக் காணப்பட்டதாகவும் போக்குவரத்துத் திணைக்களம் சுட்டிக்காட்டியது.
அத்துடன், மோட்டார் கார்கள் – 3,480, முச்சக்கர வண்டிகள் – 3,406, பஸ்கள் – 236, அம்பியூலன்ஸ்கள் – 4 பதிவுசெய்யப்பட்டிருப்பதுடன், அமரர் ஊர்திகள் ஒன்றேனும் பதிவுசெய்யப்படவில்லையென, திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 2016ஆம் ஆண்டுக்கான பதிவுசெய்யப்பட்ட மொத்த மோட்டார் வாகனங்களின் பயன்பாடு, 6,334,942 ஆகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.