யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களால் விரும்பப்படாத பொருத்து வீடுகளை, வலுகட்டாயமாக அவர்களுக்கு வழங்குவதற்கு, மீள்குடியேற்ற அமைச்சு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்துள்ள மக்களுக்கு, 65 ஆயிரம் பொருத்து வீடுகள் வழங்கப்படவுள்ளன. இந்த வீடுகள் தொடர்பில், பல்வேறு தரப்பினரால் எதிர்ப்புக்குரல் எழுப்பப்பட்டு வருகின்றமை தொடர்பில், அவரிடம் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘மக்கள் மீள்குடியேறிய பின்னர், 3 இலட்சத்துக்கு 50 ஆயிரம் ரூபாய், 5 இலட்சத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 8 இலட்சம் ரூபாய் போன்ற தொகைகளில் வீடுகளை கட்டி முடிக்கின்றனர்.
5 வருடங்கள் கூட தாக்குப்பிடிக்காத பொருத்து வீடுகளை, 16 இலட்சம் ரூபாய் செலவில் கட்டிக்கொடுக்க, மீள்குடியேற்ற அமைச்சு பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது.
அமைச்சின் பொறுப்பிலுள்ளவர்கள், பாதிக்கப்பட்ட மக்களை பகடைக்காயாக பயன்படுத்த முயற்சிக்கின்றனர். மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. மக்களுக்கு பொருத்தமற்ற பொருத்து வீடுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதோடு, நாமும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை’ என்று அவர் மேலும் தெரிவித்தார்