இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் சுமார் 1.2 பில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாண நகரில் கலாசார மண்டபம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
இந்திய உதவியுடன், 1.2 பில்லியன் ரூபா செலவில் மூன்று வருடங்களுக்குள் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த கலாசார நிலையத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை மகிந்த ராஜபக்ஷ காலத்தில் கைச்சாத்திடப்பட்டது.
யாழ்ப்பாண நூலகத்துக்கு அருகாமையில் யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான காணியில் நிர்மாணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த மத்திய நிலையத்தில் நாட்டிய மேடை மற்றும் மிதக்கும் மேடை என்பன உள்ளடக்கப்படவுள்ளன. இதன் மூலம் வட மாகாணத்தின் விசேடமாக யாழ்ப்பாண மக்களின் கலாசார உட்கட்டமைப்பு வசதிகள் பூர்த்தியாக்கப்படும் நிலையில் நாட்டின் ஏனைய மக்களின் கலாசார தொடர்புகள் வலுவடைவதுடன் யாழ்ப்பாணத்தின் பழமை வாய்ந்த கலாசார மரபுரிமைகளும் பேணப்படும்.
மேலும் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தின் கேட்போர் கூடத்தில் 600 ஆசனங்கள் அமைக்கப்படவுள்ளதுடன் கலை அரங்கம் இணைய ஆய்வு வசதிகள் பல்மொழி நூலகம் என்பன உள்ளடக்கப்படவுள்ளன. இலங்கை வாஸ்து சாஸ்திரவியலாளர்கள் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட தேசிய திட்டமிடல் போட்டியில் முன்வைக்கப்பட்ட 29 திட்டங்களிலேயே இந்த மத்திய நிலையத்துக்கான திட்டம் தெரிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.