திமுக தலைவர் கருணாநிதி சளி காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திமுக தலைவர் கருணாநிதி ஊட்டச்சத்து மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக கடந்த 1ம் திகதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஒருவார சிகிச்சைக்கு பின்னர் அவர் பூரண குணமடைந்தார். இதையடுத்து கடந்த 7ம் திகதி அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் நேற்று அவர் சளி தொல்லையால் கடுமையாக அவதிப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து நேற்று இரவு 11.10 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் ராஜாத்தி அம்மாள், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மற்றும் குடும்பத்தினர், நிர்வாகிகள் சென்றனர்.
இதுகுறித்து காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் அரவிந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திமுக தலைவர் கருணாநிதி தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக மூச்சு விட சிரமப்பட்டார். எனவே, அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.