இலங்கையில் வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாகி இன்றுடன் 91 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
1925ஆம் ஆண்டு டிசெம்பர் 16ஆம் திகதி பிரிட்டன் ஆளுனர் சேர் ஹியூ கிளிபெர்ட் தலைமையில் இலங்கையில் வானொலி ஒலிபரப்பு ஆரம்பமானது.
பிரிட்டன் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களது கட்டுப்பாட்டில் இருந்த காலனித்துவ நாடுகளில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட வானொலிச் சேவை இதுவாகும்
தொலைத்தொடர்பாடல் திணைக்களத்தின் கீழ் வானொலிச் சேவை இயங்கியது.
1979ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி ரேடியோ சிலோன் என்ற பெயரில் இலங்கை வானொலி அரச திணைக்களமாக பரிமாணம் பெற்றது.
காலனித்துவ வானொலிச் சேவையில் அறிவிப்பாளராகவும், பிபிசி நிறுவனத்தின் முகாமையாளராகவும் கடமையாற்றிய ஜோன் ஏ.லம்ஸன் வானொலித் திணைக்களத்தின் முதலாவது பணிப்பாளராவார். எம்.ஜே.பெரேரா முதலாவது சிங்கள பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றினார்.
ஒரு திணைக்களமாக இயங்குவதில் உள்ள சிரமங்களையும், சிறப்பான வானொலிச் சேவையின் தேவையையும் கருத்திற்கொண்டு 1967ஆம் ஆண்டு ஜனவரி ஐந்தாம் திகதி இலங்கை வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டது.
இலங்கையின் அப்போதைய பிரதமரான டட்லி சேனாநாயக்க மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ரணசிங்க பிரேமதாசாவும் வைபவரீதியான இதனை அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர். அதன் முதலாவது தலைவராகவும், பணிப்பாளர் நாயகமாகவும் நெல் டீ ஜயவீர நியமிக்கப்பட்டார்.
இன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் உள்நாட்டு, வெளிநாட்டு வானொலி அலைவரிசைகளை கொண்டதாக இயங்குகிறது.
தேசிய அளவில் மூன்று சிங்கள சேவைகளும், இரண்டு தமிழச் சேவைகளும், ஒரு ஆங்கில சேவையும் இயங்குகின்றன. இந்தக் கூட்டுத்தாபனம் இரண்டு சமூக வானொலிகளையும் நடத்தி வருகிறது. ஆசியாவிலேயே மிகவும் வளமான இசைத் தட்டுக் களஞ்சியசாலை கூட்டுத்தாபனத்தில் இயங்குகிறது.