கேபிக்கு எதிரான வழக்கு வரும் மார்ச் மாதம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரான கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மனாதனை கைதுசெய்ய உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிற்போட்டுள்ளது.

அதன்படி குறித்த மனுவை வரும் மார்ச் மாதம் 17ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி விஜித் மல்லேகொட உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குமரன் பத்மனாதனை கைது செய்வதை பொலிஸார் வேண்டுமென்றே தவிர்த்து வருவதாக மனுதாரர் கூறியுள்ளார்.

இதன்காரணமாக அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிடக் கோரி, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நேற்று விசார​ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, குமரன் பத்மனாதன் தொடர்பில் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, அரச தரப்பு மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் கபில வைத்தியரத்ன கூறினார்.

ஆகவே இச்சந்தர்ப்பத்தில் அந்த மனு தொடர்பில் ஆராய்வது தேவையற்றது என்று ரச தரப்பு மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்ததாக எமது செய்தியாளர் கூறினார்.

Related Posts