மக்களிடம் கருத்துக் கோருகிறது போக்குவரத்து அமைச்சு

போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகை திருத்தம் சம்பந்தமாக யோசனைகள் மற்றும் கருத்துக்களை முன்வைக்குமாறு சிவில் அமைப்புக்கள் மற்றும் பொது மக்களிடம் போக்குவரத்து அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் அது தொடர்பிலான கருத்துக்களை எழுத்து மூலமாக வழங்குமாறு அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர கூறினார்.

செயலாளர், போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் சேவை அமைச்சு, ஏழாவது மாடி, செத்சிறிபாய இரண்டாவது கட்டம், பத்தரமுல்ல என்ற முகவரிக்கு அந்த யோசனைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பி வைக்கலாம்.

இதேவேளை அண்மையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தனியார் பஸ் சங்கம் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் ஆகியன ஊடாகவும் இது தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்கள் எழுத்து மூலம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கூறினார்.

தண்டப் பணத் திருத்தம் செய்யப்பட்டதிலிருந்து தனியார் பஸ்கள் உள்ளிட்ட போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தேடிப்பார்ப்பதற்காக ஜனாதிபதியினால் அண்மையில் விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அந்தக் குழுவில், போக்குவரத்து அமைச்சின் செயலாளர், போக்குவரத்து ஆணையாளர் நாயகம், பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரி உள்ளிட்டவர்கள் அடங்கியுள்ளனர்.

எதிர்வரும் 20ம் திகதி அந்த குழு இரண்டாவது தடவையாக கூடவுள்ளதுடன், அபராதத் தொகை திருத்தம் சம்பந்தமாக இறுதித் தீர்மானம் எடுக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

தற்போது கிடைத்துள்ள யோசனைகள் மற்றும் கருத்துக்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts