பொதுவாக இந்திய பாரம்பரிய முறைத் திருமணங்கள் , ஐதீக சடங்குகள், விருந்து, கச்சேரி, கொண்டாட்டம் என்றுதான் நடக்கின்றன.
ஆனால், கேரள மாநிலத்தில் ஒரு ஜோடி தங்கள் திருமண விழாவை முற்றிலும் மாறுபட்ட முறையில் நடத்தி வந்தோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கின்றனர்.
திருச்சூரை சேர்ந்த மஞ்சு ராஜ் மற்றும் அவரது கணவர் அஜீஷ், தமது பாரம்பரிய திருமணத்தில், சில புதுவித முன்னெடுப்புகளை செய்துள்ளனர்.
குருக்கஞ்சேரி ஸ்ரீ மஹேஷ்வரி கோவிலில் டிசம்பர் மாதம் நான்காம் தேதி நடந்த இவர்களது திருமண விழாவுக்கு வந்த விருந்தினர்களுக்கு மரக்கன்றுகளை பரிசாக கொடுத்த மணமக்கள், ரத்த தானம் முகாம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.
வந்த விருந்தினர்களை ரத்த தானம் செய்யக் கோரியதோடு நின்றுவிடாமல், தாமும் ரத்த தானம் செய்த மணமக்கள், திருமண மண்டபத்தின் வெளியே மரக்கன்று ஒன்றை நட்டுவைத்து தமது திருமண வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.
தமது திருமண விழா சுற்றுச்சூழலுக்கும் சக மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று தான் விரும்பியதாகவும், அதற்கு தனது கணவர் அஜீஷ் ஆதரவளித்ததாகவும் பிபிசி தமிழிடம் பேசிய மஞ்சு ராஜ் தெரிவித்தார்.
எமது எதிர்காலம் பசுமையாக இருக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் அதற்காக தன்னால் முடிந்த சிறிய முயற்சியாக இதை செய்ததாகவும் மஞ்சு ராஜ் கூறுகிறார்.
தனது திருமண அழைப்பிதழ்களில் கூட மஞ்சு காய்கறி விதைகளை வைத்து அனுப்பியுள்ளார்.