வடக்குக் கிழக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 80 வீதமான வீடுகளை செங்கல்லினால் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் வீட்டுத் திட்ட இழுபறி நிலமை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடக்கு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிவைப்பதில் தமக்கு எந்தப் பிரச்சனையுமில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறைச்சாலைகள், மறுசீரமைப்பு, புனர்வாழ்வு அமைச்சு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சுக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான குழுநிலை விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், டி.எம்.சுவாமிநாதனுக்குமிடையில் வாய்த்தர்க்கம் உருவாகியது.
இதன்போது குறுக்கிட்டுப் பதிலளிக்கும்போது ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்ததுடன், யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் தற்போது சுதந்திரமாக நடமாடக்கூடிய நிலை உருவாகியுள்ளது மாத்திரமன்றி நாடாளுமன்றத்திலும் அமைச்சர்களுக்கிடையில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபடமுடியும். கடந்த அரசாங்கத்தில் அமைச்சருக்கெதிராக யாராவது ஏதாவது கூறினால் ரவிராஜூக்கு நடந்ததைப்போல் நடந்திருக்கும்.
தற்போது அவ்வாறில்லை. இருதப்பினரையும் சந்தித்து பிரச்சனையைத் தீர்ப்பதற்குத் தயாராக இருப்பதுடன், வடக்கு மக்களின் அபிவிருத்திக்கு அதிகளவான நிதியையும் ஒதுக்கத் திட்டமிட்டுள்ளோம். அபிவிருத்தி தொடர்பில் அமைச்சருக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்குமிடையே கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. எனினும் நாம் இதற்கு குண்டுகளைப் பயன்படுத்தாது பேசித் தீர்ப்போம் எனத் தெரிவித்தார்.