சம்பந்தன் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்!

தமிழர் தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் மற்றும் அநியாயச் செயல்களுக்காக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடக பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘நாட்டில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமாயின் பெரும்பான்மை, சிறுபான்மை ஆகிய இரு தரப்பும் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

தமிழ் மக்களுக்கு எதிராக பெரும்பான்மையினர் மேற்கொண்ட அடாவடித்தனங்களுக்கு சிங்கள தலைவர்கள் பகிரங்க மன்னிப்புக்கோரியதை போல் தமிழர் தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட அராஜகங்களுக்கு தமிழ் தலைமைகள் மன்னிப்புக் கோர வேண்டும்.

கருப்பு ஜூலை கலவரத்தில் நடைபெற்ற அசம்பாவிதம் குறித்து ஒட்டுமொத்த சிங்கள மக்கள் சார்பிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மன்னிப்புக்கோரினார். அதேபோன்று, யாழ் நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் மன்னிப்பு கோரினார். இவ்வாறு மன்னிப்புக்கோரியமை நல்ல விடயமாகும்.

இதற்கு அமைவாக தமிழர் தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் மற்றும் அநியாயச் செயல்களுக்காக எதிர்க்கட்சி தலைவர் மன்னிப்பு கோர வேண்டும்’ என்றார்.

Related Posts