பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவே என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கூட்டு எதிர்க்கட்சி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜயசூரியவும், பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
பிரதமரும், சபாநாயகரும் குறித்த சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பு தொடர்பில் பொலிஸ் மாஅதிபருடன் கலந்துரையாடவுள்ளதாக இன்று நாடாளுமன்றில் உறுதியளித்துள்ளனர்.
பொலிஸ் மாஅதிபரை தான் இன்று சந்திக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள நிலையில், சபாநாயகர் கரு ஜயசூரிய அடுத்தவாரம் பொலிஸ் மாஅதிபரை சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 30ஆம் திகதி இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டமொன்றின்போது பொலிஸ் மாஅதிபருக்கு வந்த தொலைபேசி அழைப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் அவரது கைத்தொலைபேசிக்கு வரும் அழைப்பிற்கு பதில் வழங்கும் பொலிஸ் மாஅதிபர் “குறித்த நிலமேயை கைது செய்யப்போவதில்லை, என்னுடைய அனுமதி இல்லாமல் கைது செய்ய வேண்டாமென உத்தரவு பிறப்பித்துள்ளேன்“ எனக் கூறும் காணொளி ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பில் நாடாளுமன்றில் கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர நடந்துகொண்ட விதம் முற்றிலும் தவறானது என தெரிவித்திருந்த ஜனாபதி மைத்திரபால சிறிசேன இது தொடர்பில் அவரை அழைத்து விளக்கம் கோரவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.