யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் கடந்த ஒக்டோபர் மாதம் 20ம் திகதி பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்து இருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சந்தேகத்தின் போரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
அந்நிலையில் குறித்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதிஸ்தரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஐந்து சந்தேகநபர்களும் நீதிமன்றில் முற்படுத்தபட்டனர்.
குறித்த வழக்கில் உயிரிழந்த மாணவர்களின் உறவினர்களின் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் மன்றில் முன்னிலையானார். குறித்த வழக்கு விசாரணை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில் ,
உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரை மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிசார் அழைத்ததாகவும் மறுநாள் கஜன் எனும் மாணவனின் தாயார் பொலிஸ் நிலையம் சென்ற வேளை அங்கிருந்த பொலிஸ் உயர் அதிகாரி இது தற்செயலாக நடந்த சம்பவம் இது தவறுதலாக நடந்து விட்டது, வேணும் என்று செய்த ஒன்றல்ல என பல விடயங்களை குறித்த பொலிஸ் அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாக தாயார் தெரிவித்தார் எனவும் அதனை நான் மன்றுக்கு தெரிய படுத்தினேன் எனவும் சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும் அதற்கு குற்ற புலனாய்வு பிரிவினர் பதில் அளிக்கையில் அது ஒழுக்காற்று விசாரணை நடவடிக்கைகளை முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகர் நடத்தும் விசாரணை எனவும் அதற்கும் தமக்கும் தொடர்பில்லை எனக் கூறினார்கள் எனவும் பொலிசார் துப்பாக்கி பிரயோகம் செய்து தான் மாணவர்கள் இறந்தார்கள் என நன்றாக தெரிந்தும் , முதலாவதாக பொலிசார் நீதவானுக்கு கொடுத்த அறிக்கையில் வீதி விபத்தில் இறந்தார்கள் என்றே கொடுத்து இருந்தார்கள்.
இந்த சம்பவத்தை மூடி மறைக்க பொலிசார் எடுத்த பல முயற்சிகள் காரணமாகவும் நீதிமன்றம் கடுமையான சில உத்தரவுகளை கொடுத்துள்ளது.
ஆயுத களஞ்சியத்தில் இருந்து ஆயுதம் எடுக்கப்பட்ட விதம் சம்பந்தமாக விசாரணைகளை நடாத்தி விஷேட அறிக்கை சமர்ப்பிக்கும் மாறு நீதவான் உத்தரவு இட்டுள்ளார் எனவும் சுமந்திரன் தெரிவித்தார்