கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நான்கு நோயாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தேடிப்பார்ப்பதற்கு சுகாதார அமைச்சினால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவினால் கடந்த 28ம் திகதி இருதய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஆறு நோயாளர்களில் நான்கு நோயாளர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
அதன்படி இது தொடர்பில் தேடிப்பார்ப்பதற்காக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஆலோசனைக்கமைய, சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபால தலைமையில் விசாரணைக் குழுவொன்று அமைப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
மருத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மி சோமதுங்க, ஆய்வுகூட சேவைகள் பணிப்பாளர் கே.கே.பி. கமல் ஜயசிங்க, திடீர் சோதனைகள் பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ரோஹண டி சில்வா ஆகியோர் இக்குழுவில் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த உயிரிழப்புக்கள் தொடர்பாக முறையான விசாரணை ஒன்றை நடத்தி, அது தொடர்பான அறிக்கையை சுகாதார அமைச்சுக்கு சமர்பிக்க அந்த குழுவிற்கு பணிக்கப்பட்டுள்ளது.