யாழ். வைத்தியசாலை ஊழல், மோசடி தொடர்பான விசாரணையில் முடிவு எட்டப்படாவிடத்து நாடளாவிய ரீதியில் போராட்டம்

யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற அரச சொத்து ஊழல் தொடர்பான விசாரணையில் முடிவுகள் எட்டப்படாத நிலையில் வடமாகாண வைத்தியசாலைகளில் இன்று மேற்கொள்ளப்பட்ட அடையாள பணிப்பகிஷ்கரிப்பின் பின்னர் சுகாதார அமைச்சினால் தீர்க்கமான முடிவுகள் கிடைக்கப்படாவிட்டால் குறுகிய காலத்தில் நாடளாவிய ரீதியில் போராட்டம் நடாத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க தாய் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் பா.சாய்நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் அரச மருத்துவ சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அடையாள பகிஷ்கரிப்பு தொடர்பான இறுதி முடிவுகள் தொடர்பாக வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

3 அம்ச கோரிக்கைளை முன் வைத்து இன்று இப்பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலையின் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யபப்பட்டதை சுகாதார அமைச்சுக்கு தெரியப்படுத்தியும் 3 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதாக கூறி இன்று வரை அதை நடைமுறைப்படுத்த தவறியுள்ளது.

புற்றுநோய் வைத்திய நிபுணர் ஜெயக்குமாரின் வீட்டின் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நிலையில் எவரும் கைது செய்யப்படவில்லை.

யாழ். போதனா வைத்தியசாலையின் அரச மருத்துவ சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு தொலைபேசி மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாது சுகாதார அமைச்சு பாரபட்சம் காட்டி வரும் நிலையில் இந்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

யாழ் போதனா வைத்தியசாலை அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பாக சுகாதார அமைச்சினால் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 3 பேரை மேலதிக விசாரணை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் சுகாதார அமைச்சரினால் மேலதிக விசாரணை நடாத்தப்பட வில்லை.

இதன் காரணமாகவே வடமாகணத்தின் போதனா வைத்தியசாலைகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட அரச மருத்துவர்கள் இன்று அடையாள பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இதன் பின்னர் இன்று மாலை சுகாதார அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கலந்துரையாடலின் பின், தீர்க்கமான முடிவுகள் கிடைக்காவிடின் மிக குறுகிய காலத்தில் நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அரச மருத்துவ தாய் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

Related Posts