“யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் காணாமற்போவதற்கு காரணமாகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 14 இராணுவத்தினரின் பிணை மனு தொடர்பான விசாரணை, எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி நடைபெறும்” என யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், நேற்றுத் திங்கட்கிழமை (28) உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், காணாமற்போவதற்கு காரணமாகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 14 இராணுவத்தினருடைய வழக்கு விசாரணை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.
இதற்கமைய, 14 இராணுவத்தினரும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி, யாழ். மேல் நீதிமன்றத்தில் பிணை மனுத் தாக்கல் செய்திருந்தனர். இவர்களின் பிணை மனு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் ஜனவரி மாதம் விசாரணை இடம்பெறும் என நீதிபதி தெரிவித்தார்.
கடந்த 1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி, அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், அச்செழு முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு காணாமற்போனார்கள்.
மட்டுவில் வடக்கைச் சேர்ந்த செல்வரத்தினம் ஜெயசீலன், நாகமணி சௌந்தராஜன் ஆகிய இளைஞர்கள் இவ்வாறு காணாமற்போனார்கள். இவர்கள் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பிணையில் விடுவிக்கப்பட்ட 16 இராணுவத்தினர் தொடர்பான கோவை, சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டு அது இதுவரை காலமும் கிடப்பில் இருந்துள்ளது.
18 வருடங்களின் பின்னர், இந்த வழக்கை, சட்டமா அதிபர் திணைக்களம் பரிசீலனைக்கு எடுத்தது. திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகை, கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட போது, 5 இராணுவத்தினர் மாத்திரம் ஆஜராகியிருந்தனர். அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், மிகுதி 11 பேருக்கும் எதிராகப் பிடியாணை பிறப்பித்தார்.
மொத்தம் 16 இராணுவத்தினரில் 2 இராணுவத்தினர், யுத்தத்தில் உயிரிழந்தமையால், மிகுதி 14 இராணுவத்தினரும் திங்கட்கிழமை மன்றில் ஆஜராகினர்.