மணல் கடத்தல்காரர்களுடன் தொடர்பினை பேணி, அவர்களின் நடவடிக்கைக்கு ஆதாரவாக செயற்பட்டு வந்த, நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் நிர்வாகப்பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக, காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கடந்த நான்கு வருடங்களாக நிர்வாக பிரிவில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர், துன்னாலை பகுதியில் உள்ள சட்டவிரோத மண் கடத்தல்காரர்களுடன் தொடர்பினை பேணி வருவதுடன், பொலிஸ் நற்சான்றிதழ்கள் ஏனைய உறுதிபடுத்தப்பட்ட சான்றிதழ்களை வழங்குவதற்கு இலஞ்சம் பெறுவதனை வாடிக்கையாக கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரம், முள்ளி சந்தியில் ஹன்ரர் வாகனம் மோதி, பாடசாலை அதிபர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவ் விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதியினை விடுத்து, அவருக்கு பதிலாக வேறு ஒரு நபரை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்த முயற்சித்தமைக்கு 2 இலட்சம் ரூபாய் பணம் பெற்றமை தொடர்பில் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்னவிடம் காயமடைந்த நபரின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையினை மேற்கொள்ள காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஆர்.றஞ்ஜித் மாசிங்கவுக்கு, பிரதி பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரை தொடர்புகொண்டு கேட்ட போது, ‘விபத்து இடம்பெற்ற ஹன்ரர் வாகனத்தின் சாரதியினை விடுத்து, வேறு ஒருவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறினார். மேலும், சிரேஷ்ட் பொலிஸ் அத்தியட்சகருக்கு தேவையான பணிப்புரைகளை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.