வீதியில் சென்றுக்கொண்டிருந்த பெண்ணின் தங்கச்சங்கிலியை கொள்ளையடிக்க முற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பிரதேச இளைஞர்களால் மடக்கிப்பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பாடசாலை மாணவனை, 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் செல்வதற்கு மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் சனிக்கிழமை (26) அனுமதி வழங்கினார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்புடைய வழக்கை, எதிர்வரும் 02ஆமி திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் உடுவில் வீதிக்கு முன்னால், மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த யுவதியை, சந்தேக நபர் தன்னுடைய மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனை அவதானித்த அங்கு நின்றுக்கொண்டிருந்த இளைஞர்கள், ஓடிய நபரை மடக்கிப்பிடித்து அவரை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதனிடையே, மோட்டார் சைக்கிள் மோதியதால் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண், குறித்த நபர் தனது நகையை கொள்ளையடிக்க முயற்சித்ததாகவும் அதனால் தனது தங்கச்சங்கிலி அறுந்ததகாவும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
இதன் பின்னர், வழக்கு பதிவு செய்த சுன்னாகம் பொலிஸார் விபத்தை ஏற்படுத்திய பாடசாலை மாணவனை கைது செய்து, சனிக்கிழமை (26) மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சனின் வாசஸ்தலத்தில் முற்படுத்தியிருந்தனர்.
இளைஞன் க.பொ.உயர்தரத்தில் கல்வி கற்றுவருவதனை கவனத்தில் எடுத்த நீதவான் பிணையில் செல்ல அனுமதியளித்தார்.