இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் உள்ள நளினி, ராஜீவ் காந்தியின் கொலை குறித்து எழுதிய புத்தகம் இன்று (வியாழக்கிழமை) வெளியாகவிருக்கிறது.
அந்தப் புத்தகத்தில் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா தன்னை சிறையில் வந்து சந்தித்தது குறித்தும் அப்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்தும் நளினி எழுதியிருக்கிறார்.
மூத்த பத்திரிகையாளரான பா.ஏகலைவன் இந்தப் புத்தகத்தைத் தொகுத்து, ‘யாழ். பதிப்பகம்’ என்ற தனது பதிப்பகத்தின் மூலமாக வெளியிடுகிறார்.
இதன் வெளியீட்டு நிகழ்வில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சீமான் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.