‘ஆவா’ குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் நிரபராதிகளாவே உள்ள நிலையில், உண்மைகள் நிரூபிக்கப்படும்வரை அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ‘ஆவா’ குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவிலலை எனவும் குறித்த ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
வடக்கில் அண்மை காலமாக கொலை, கொள்ளை, வாள் வெட்டு உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகளில் ஆவா என்ற குழு ஈடுபட்டுவருகின்றது. இது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் நாள்தோறும் கிடைக்கப்பெறுகின்றன. அதன்படி பல்வேறு கைதுகளும் தொடர்ந்து வருகின்றன.
ஆனால் இவ்வாறு கைது செய்யப்படுபவர்களில் பலர் குற்றச் செயல்களில் ஈடுபடாதவர்களாகவே காணப்படுகின்றனர். எனவே உண்மைகள் உறுதிசெய்யப்படும்வரை அவர்களை பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.