யாழ். மாநகர சபை சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பினால் யாழ். நகர் முழுவதும் கழிவுப்பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் சுகாதாரச் சீர்கேடான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன் தாக்கத்தினால் வயிற்றோட்டம், கொலரா மற்றும் டெங்கு ஆகிய நோய்கள் பரவலாம் என அரச மருத்துவ சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மழை ஆரம்பித்துள்ளதால் கழிவுகள் நீரில் கரைந்து தொற்றுக் கிருமிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.
இதனால் கொலரா, வயிற்றோட்டம் மற்றும் டெங்குநுளம்பு தாக்கம் அதிகரிக்கக்கூடும். எனவே, மக்கள் மிக அவதானத்துடன் தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குடிநீரைக் கொதிக்க வைத்துப் பருகுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சுத்திகரிப்பு தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு இதுவரையில் உரிய தீர்வோ மாற்று முறைமைகளோ கண்டு கொள்ளப்படாமையினால் நாம் விசனமடைகின்றோம். இதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தத்தைத் தவிர்க்க, உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாக அச் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.