தமிழக மீனவர் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு ஏற்படாததற்கு, இலங்கையின் வட மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே முழுக் காரணம் என்று, இந்திய தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ குற்றம்சாட்டினார்.
இராமநாதபுரத்தில் தமிழகத்தின் 13 கடற்கரை மாவட்டங்களை சேர்ந்த மீனவ பெண்களின் முதலாம் மாநில மாநாடு தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது.
மீனவர் சமுதாய தலைவர்கள் ஆண்டன்கோமஸ், இராமநாதபுரம் மீன்பிடி தொழிலாளர் ஒன்றிய தலைவர் பால்ச்சாமி, செயலாளர் ஜோசப், தமிழக மீனவ பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்பு செயலாளர் காளியம்மாள், அன்னலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் மீனவர் நலன் குறித்து நூர்ஜஹான் சிறப்புரையாற்றினார். இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவ மகளிர் மற்றும் மீனவர்கள் திரளாக கலந்துகொண்டனர். முன்னதாக தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ நிருபர்களிடம் கூறியதாவது:–
இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கடற்கரை ஓரங்களில் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை அழிக்கும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுபோன்ற கடல் மற்றும் கடற்கரை அபகரிப்பை தடுக்க வலியுறுத்தி வரும் 21–ம் திகதி டெல்லியில் மீனவர் பேரணி தேசிய மீனவர் பேரவையின் சார்பில் நடத்தப்படுகிறது. கடந்த 2–ம் திகதி நடைபெற்ற இந்திய–இலங்கை மீனவர் பிரதிநிதிகளின் 4–வது கட்ட பேச்சுவார்த்தை வெறும் கண்துடைப்பாக மட்டுமே நடைபெற்றது.
குறைந்தபட்சம் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் ரூ.60 கோடி (இந்திய ரூபா) மதிப்பிலான 115 படகுகளையாவது விடுவித்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தமிழக மீனவர் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படாமல் இருப்பதற்கு இலங்கை வடக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்தான் முக்கிய காரணமாக இருந்து வருகிறார். இலங்கையில் ஒரு சில பகுதிகளில் இன்றளவும் இழுவலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர்.
இன்னும் சில பகுதிகளில் இதற்கான அனுமதி கோரி போராடி வருகின்றனர். அப்படி இருக்கும் போது இழுவலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக தமிழக மீனவர்கள் மீது குற்றம்சாட்டுவது அர்த்தமற்றது. இலங்கை பிரதமர் இந்தியா வரும்போது நல்லெண்ண அடிப்படையில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால், பா.ஜ.க. அரசு பொறுப்பேற்று இத்தனை மாத காலத்தில் அரசு முயற்சியின்பேரில் ஒரு மீனவர்கள் கூட விடுதலையாகவில்லை. படகுகளும் விடுவிக்கப்படவில்லை. கன்னியாகுமரியில் அமைக்க திட்டமிட்டுள்ள இணையம் துறைமுகம் ஒட்டுமொத்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் செயலாகும். இந்த துறைமுக நடவடிக்கையை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு கூறினார்.