இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் வீரர்களுக்கான ஒப்பந்தத்தை தான் நிராகரித்ததாக லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 11 மாதங்களாக இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடாத அவர், விளையாடுவதற்கான பொருத்தமான உடல்நிலைமை வரும் வரை எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது…
” எனக்கு கிரிக்கட் நிறுவனத்தினால் ஒப்பந்தம் வழங்கப்பட்டது, எனினும் அந்த ஒப்பந்தத்தை என்னால் ஏற்க்க முடியாது என இலங்கை கிரிக்கட் நிறுவனத்திடம் நான் தெரிவித்தேன். ஏன் என்றால் கடந்த 11 மாதங்களாக நான் நாட்டிற்காக விளையாடவில்லை.
நான் கிரிக்கட் விளையாட உரிய நிலைக்கு வந்த உடன், அடுத்த ஒப்பந்தத்தில் என்னை கவனத்தில் எடுத்து கொள்ளுமாறு நான், கிரிக்கட் நிறுவனத்திற்கு தெளிவுப்படுத்தினேன்.
எனக்கு ஒப்பந்தம் பெற்று கொடுத்தமை குறித்து மகிழ்ச்சி, எனினும் நான் தீர்மானித்தேன், விளையாடாத நான் இந் நேரத்தில் ஒப்பந்தத்தை பெற்று கொண்டால் அது மற்றைய வீரர்களுக்கு செய்யும் அநீதியாகும்.
எனக்கு பெற்று கொடுக்கப்படும் பணம் வேறு ஒரு இளம் வீரரின் வளர்ச்சிக்கு பயன்படுத்த கூடிய சந்தர்ப்பம் உள்ளது.
எனது தீர்மானத்தினை ஏற்று கொண்டார்களா? இல்லையா? என இதுவரை எனக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை.
எனினும் கிரிக்கட் நிறுவன அதிகாரிகள் எனது தீர்மானித்திற்கு ஒப்புக் கொண்டு அதனை ஏற்பார்கள் என நினைக்கிறேன் ” என அவர் தெரிவித்துள்ளார்.