யாழில் பதற்றமான ஒரு நிலைமை உள்ளதாகவும், அங்கு ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக காண்பிக்கவும், இந்த அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காகவே ஆவா குழு என்று கூறி கைது நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார். யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து குறிப்பிட்ட அவர், தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழுடன் எழுந்த எழுச்சியின் பின்னர் பொலிஸாரினால் யாழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னர், பல்கலை சமூகம் கொந்தளித்து கொண்டு இருந்ததை வெளிப்படையாக காணக்கூடியதாக இருந்ததாகவும் கூறினார்.
இவ்வாறான ஒரு எழுச்சியை முடக்குவதற்கு அரசாங்கத்திற்கு பாரிய தேவை இருக்கின்றது. பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை நியாயப்படுத்த வேண்டிய தேவை இருப்பதால்தான், யாழில் பதற்றமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக காட்ட முயற்சிக்கின்றனர் என்றும் கூறினார்.
இதற்காகவே ஆவா குழு என்றும், அவர்களில் சிலர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்னர் என்றும் காட்டுவதற்காக கைது நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்றும் கூறினார்.
வடக்கில் ஒரு பதற்றம், இருக்கின்றது, ஆயுதம் தாங்கிய பொலிஸார் அங்கு தேவை என்பதை நிரூபிப்பதற்கும், அதன் பின்னணியிலேயே மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று காண்பிக்கவுமே அரசாங்கம் முயற்சிப்பதாகவும் கூறினார்.