எலும்பு தேய்வடையும் நோயானது (ஒஸ்ரியோபொரோசிஸ் – DEXA SCAN) வயது முதிர்ந்தவர்களில் குறிப்பாக மாதவிடாய் நின்ற பின்னர் பெண்களில் காணப்படுகின்ற ஒரு பிரச்சினையாகும். இது ஏற்படுவதற்கு பல்வேறுபட்ட ஹோர்மோன் குறைபாடுகள், நீண்ட கால சத்துக் குறைபாடுகள், பலவிதமான உடல் நோய்கள் மற்றும் சில வகையான மருந்துவகைகளை நீண்டகாலமாக உள்ளெடுத்தல் என்பன காரணமாக அமையலாம்.
இவ்வாறு எலும்பு தேய்வடையும் நிலையை ஆரம்பத்திலேயே இனங்கண்டு சிகிச்சையளிப்பதன் மூலம் எலும்புகள் முறிவடைதல் மற்றும் பல்வேறுபட்ட பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். இவ்வாறு எலும்பு தேய்வடைவதைக் கண்டறிவதற்கான சிறந்த பரிசோதனையாக அமைவது DEXA SCAN ஆகும். இவ்வளவு காலமும் எமது நோயாளர்கள் இப்பரிசோதனைக்கு உட்படுவதற்கு கொழும்பை நாடிச் செல்ல வேண்டிய தேவையிருந்தது.
சுகாதார அமைச்சினதும் யாழ்போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்களதும் அயராத முயற்சினால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு DEXA SCAN இயந்திரத்தைப் பெறுவது நிறைவேற்றியுள்ளது.
வடக்கு – கிழக்கு மாகாணங்களிலேயே முதற் தடவையாக இந்த DEXA SCAN சேவையானது யாழ் போதனா வைத்தியசாலையில் 04.11.2016 வெள்ளிக்கிழமை பணிப்பாளரினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இப் பரிசோதனை இயந்திரம் கிடைக்கப்பெற்று தொழிற்பட ஆரம்பித்துள்ளமையானது எமக்குக் கிடைத்த வரப்பிரசாத மென்பதில் ஐயமில்லை.