கிளிநொச்சியில் பொலிஸாருக்கும், பொது மக்களுக்கும் மோதல் ஏற்படக் காரணமாக செயற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி தர்மபுரம் கட்டைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஆறுமுகம் நவநீதராசா என்பவருக்கே எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்.
கிளிநொச்சி ஏ9 வீதி வைத்தியசாலைப் பகுதியில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் கடந்த ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி மோதல் ஏற்பட்டிருந்தது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கிளிநொச்சி உட்பட வடமாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்ட நிலையில், சில வாகனங்களை பலவந்தமாக இயக்க முற்பட்டதாலேயே இந்த மோதல் மூண்டிருந்தது.
குறிப்பாக ஹர்த்தாலுக்கு மத்தியில் வாகனங்களை இயக்க பொலிஸார் பாதுகாப்பு வழங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி நகரில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அங்கு பாதுகாப்புப்பணிகளுக்காக ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது, போத்தலுடன் நின்றிருந்த, தர்மபுரம் கட்டைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஆறுமுகம் நவ நீதராசா போத்தலொன்றை வீசி எறிந்துள்ளார்.
இதனால் அங்கு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தை அடுத்தே பொலிஸார் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த நிலையில் மறுநாள் பொலிஸார் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தர்மபுரம் கட்டைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஆறுமுகம் நவநீதராசா என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
இவரை கடந்த மாதம் 31 ஆம் திகதி அடையாள அணி வகுப்பு செய்வதற்காக கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதிலும், சம்பவத்தின் போது, காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் நீதிமன்றத்திற்குச் சமூகமளிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கமைய குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, நேற்றய தினமும் அடையாள அணிவகுப்பு செய்வதற்கு காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் நீதிமன்றிற்கு சமூகமளிக்கவில்லை.
இதனையடுத்து எதிர்வரும் எட்டாம் திகதி வரை சந்தேக நபரின் விளக்கமறியலை நீடித்த கிளிநொச்சி நீதவான் அன்றைய தினம் அடையாள அணி வகுப்பை நடத்துவதாக உத்தரவிட்டுள்ளார்.