தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்ததாக அப்போலோ மருத்துவமனைகள் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். அப்போலோ மருத்துவமனை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவ கையேடு வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
அந்த விழாவின்போது செய்தியாளர்களிடம் பேசிய அப்போலோ மருத்துவமனைகள் தலைவர் பிரதாப் ரெட்டி, “தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டார். தன்னைச் சுற்றி நடப்பதை அவர் நன்கு உணர்ந்து கொள்கிறார். அவருக்கு என்ன தேவைப்படுகிறதோ அதை அவரே கேட்டுப் பெறுகிறார். ஜெயலலிதா குணமடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எப்போது டிஸ்சார்ஜ் என்பதை முதல்வரே முடிவு செய்ய வேண்டும்.
அவர் பூரண குணமடைந்ததற்கு அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் மட்டுமல்ல அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர், எய்ம்ஸ் நிபுணர்கள், சிங்கப்பூர் மருத்துவர்கள் என அனைவரது பங்களிப்பும் இருக்கிறது” என்றார்.
முதல்வர் ஜெயலலிதா இன்னும் 3 நாட்களில் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றப்படுவார் என அப்போலோ மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டிருந்த நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனைகள் குழுத் தலைவர் பிரதாப் ரெட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்ததாக கூறியிருக்கிறார்.