குற்றச் செயல்களில் ஈடுபடும் குழந்தைகளுக்கு தண்டனை வழங்கும் வயது 12 ஆக உயர்கிறது

இலங்கையில் குற்றச் செயலில் ஈடுபடும் சிறுவர்களுக்கு தண்டனை வழங்கும் வயது 12 ஆக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், தற்போது நடைமுறையிலுள்ள குற்றவியல் சட்டத்திலுள்ள தண்டனை கோவையில், சில திருத்தங்களை செய்ய நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் முன் வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள குற்றவியல் சட்டக் கோவையில் குற்றச் செயலில் ஈடுபடும் சிறுவர்களுக்கு தண்டனை வழங்கும் ஆகக் குறைந்த வயது 8ஆக உள்ளது.

இருப்பினும், உத்தேசச் சட்டத்தின்படி 12 வயதுச் சிறுவன் ஒருவன் குற்றச் செயலில் ஈடுபட்டால் அவனுக்கு தண்டனை வழங்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

12 தொடக்கம் 14 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் குற்றச் செயல்களை புரியக் கூடிய கடினமான மனநிலையை கொண்டிருந்தால் அது தொடர்பாக நீதவான் அவதானித்திருக்கும் பட்சத்தில் தண்டனை வழங்கும் வகையிலான சரத்துகளையும் கொண்டதாக இந்த திருத்தம் அமைகின்றது.

இந்தச் சட்டம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, பின்னர் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு முன்வைக்கப்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

Related Posts