லிபியாவுக்கு அப்பாலுள்ள கடலில் இரண்டு படகுகள் மூழ்கியதால் நூற்றுக்கணக்கான குடியேற்றவாசிகள் பலியாகியிருப்பதாக ஐ.நா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறைந்த பட்சம் 239 பேர் மரணித்துள்ளதாக தெரிகிறதென ஐ.நா அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் கார்லோட்டா சமி குறிப்பிட்டார்.
விபத்தில் உயிர் தப்பிய இரண்டு பேர் இத்தாலியின் லம்பெடுசா தீவின் கரையோரத்திற்கு கொண்டுவரப்பட்டதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை லிபியாவில் இருந்து இத்தாலிக்கு ஒரு படகில் 100-க்கும் மேற்பட்ட அகதிகள் பயணம் செய்துள்ளனர். இந்தப் படகு இத்தாலியின் லம்பேடுசா தீவை நெருங்கும்போது படகு கடலில் மூழ்கியது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 39 பேர் தப்பித்து லம்பேடுசா தீவை அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் காலை மேலும் ஒரு படகு கவிழ்ந்துள்ளது. இதில் 140 பேர் மூழ்கி பலியாகியுள்ளனர். இரண்டு பேர் மட்டுமே தப்பித்துள்ளனர் என்று மற்றுமொரு ஊடகம் தெரிவித்துள்ளது.
மத்திய தரைக் கடலை கடந்து ஐரோப்பாவை அடைய முயற்சித்த சமயம் இவ்வாண்டு நான்காயிரத்து 200க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் மரணத்தை தழுவியிருப்பதாக சர்வதேச அமைப்பொன்று கூறுகிறது.