யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவா குழுவுடன் முன்னாள் போராளிகளுக்கு தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லையென முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அடித்துக் கூறியுள்ளார்.
அதேபோல் இராணுவமும் முன்னாள் போராளிகளை வைத்து, ஆவா கும்பலைப் போன்ற ஒரு கும்பலை இயக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் களனித் தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கும் நிகழ்வு நேற்று அந்தக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவரான அமரர் ஜேர்.ஆர்.ஜயவர்தன உட்பட முக்கியத்தலைவர்கள் பதவி வகித்த மிகவும் முக்கியமான தொகுதியான களனி தொகுதிக்கே பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா நியமிக்கப்பட்டிருக்கின்றார். இந்த நியமனக் கடிதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கையளித்தார்.
இதனையடுத்து தென்பகுதியில் கடந்த சில நாட்களாக பெரிதாக பேசப்பட்டுவரும் யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா கும்பல் தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவிடம் கேட்டபோது, இராணுவத்திற்கும், ஆவா குழுவிற்கும் தொடர்பில்லை என்று கூறினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு அதை விடவும் வேறு பணிகள் உள்ளன. தோல்வியடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளையோ அல்லது இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களையோ தமது தேவைகளுக்குப் பயன்படுத்துவதானது கேலிக்குரிய விமர்சனமாகும். புனர்வாழ்வுப் பெற்ற போராளிகளில் யாராவது சட்டவிரோத செயல்களில் ஈடுபட உந்தப்பட்டால் சட்டத்திற்கு விரோதமாக எழுந்தால் அவர்களே தமது எதிர்காலத்தை பழாக்கிக்கொள்ளவே முயற்சிப்பதாக அமைந்துவிடும்.
ஆவா குழு அரசியல் நோக்கத்திற்கான பயணத்தை மேற்கொள்கிறது என்று நான் நினைக்கவில்லை. அந்தக் குழு கப்பம் கோரும் குழுக்களைப் போன்றதொரு பிரிவு என்றே நான் நினைக்கின்றேன் என்றார்.
இதேவேளை யுத்தத்தை முடித்ததாக பெருமை பாராட்டிக் கொள்ளும் இந்த அரசாங்கம், ஆவா குழு போன்ற கொள்ளைக் கும்பல்களை பிடிக்க இயலாதிருப்பது கேவலமான ஒரு விடையம் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க அண்மையில் கூறியிருந்தார்.
உண்மையில் ஏன் அந்தக் குழுவை பாதுகாப்பு தரப்பினரால் பிடிக்கமுடியவில்லை என்று ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் -“எமக்கு கிடைக்கப்பெற்ற அறிக்கையின்படி ஆவா குழுவிலுள்ள சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எமது நாடு மிகப்பெரிய நாடாகும். திருடன் தப்பிச்சென்று காடுகளில் தலைமறைவானால் கண்டுபிடிப்பது சற்று சிரமம்.
மிகத்திறமைவாய்ந்த பொலிஸ் குழுக்கள் எமக்கு உள்ளன. எனவே வெகு விரைவில் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்திற்கு முன்பாக நிறுத்தப்படுவார்கள்” என்றார்.