யாழ்ப்பாணத்தில் மக்களிடையே அச்சத்தை தோற்றுவித்துவரும் ஆவா குழுவை தாம் உருவாக்கவில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, அந்தக் குழுவுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தனக்கு எதிராக முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்த கோட்டாபய ராஜபக்ச, ஒட்டுமொத்த படையினரையும் அமைச்சர் கேவலப்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் செயற்பட்டுவரும் ஆவா குழுவை முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், முன்னாள் இராணுவ மேஜர், கேர்ணல் தர அதிகாரி ஒருவரும் இணைந்தே உருவாக்கியிருப்பதாகவும், இதனை தாம் முன்னதாகவே அறிந்து வைத்திருந்ததாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று கூறியிருந்தார்.
இந்த ஆவா குழுவை வடக்கில் அமைதியின்மையை ஏற்படுத்தி அதனூடாக ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு தற்போதும் முயற்சிகள் இடம்பெறுகின்றதா என்பது குறித்து உளவுப்பிரிவு ஊடாக விசாரணை செய்யப்படும் என்றும் அமைச்சர் ராஜித தெரிவித்தார்.
அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இந்தப் பகிரங்க குற்றச்சாட்டை கோட்டாபய ராஜபக்ச மறுத்துள்ளார்.
அமைச்சர்களால் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான அறிவிப்புக்களினால் தனக்கு அல்ல, ஒட்டுமொத்த இராணுவத்தினருக்கும் ஒரு இழுக்காகவே கருதுவதாகவும் கூறியுள்ளார்.
அரசியல் ரீதியாக தன்மீது மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான தாக்குதல்கள், ஸ்ரீலங்காவின் முழு இராணுவத்தினரை தாக்குவதாகவே அமைகிறது என்று தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ச, இராணுவத்தினர் ஒருபோதும் இவ்வாறான ஈனச்செயலை செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.