சிறீலங்காவில் கணவருடன் வசித்து வந்த மகள், ஒருவருடம் கடந்த நிலையிலும் தன்னுடன் பேசவே இல்லை என இந்தியாவிலுள்ள தாய் ஒருவர் கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி நடுத்தெருவை சேர்ந்தவர் வீரபுத்திரன். இவருக்கு கனகம்மாள் என்ற மனைவி உள்ளார். அவர் இன்று தூத்துக்குடி ஆட்சியர் ரவிக்குமாரிடம் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கனகம்மாள் கூறியிருப்பதாவது: “எனது மகள் தங்கம். அவருக்கு 27 வயது ஆகின்றது. கொழும்பு பண்டாரநாயக்க பகுதியை சேர்ந்த இராதாகிருஷ்ணன் அமிர்தம் எங்களது உறவினர்.
அவரது மகனான விக்னேஸ்வரன் என்கிற கண்ணனுக்கு கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி திருமணம் செய்து கொடுத்தோம்.
திருமணம் முடிந்த பின்னர் எனது மகள் தங்கமும், மருமகன் கண்ணனும் மணியாச்சியிலேயே வசித்து வந்தனர்.
அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு பெற்றோரை பார்க்க வேண்டும் என்று கூறி விக்னேஸ்வரன் எனது மகள் மற்றும் குழந்தைகளுடன் கொழும்புக்கு சென்றார்.
அங்கு சென்ற பின்பு அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து எனது மகள் என்னுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்தார்.
ஆனால் கடந்த 2015 முதல் எனது மகள் என்னிடம் பேசவேயில்லை. தற்போது வரை அவள் என்னிடம் தொடர்பு கொள்ளவும் இல்லை.
எனது கணவர் வீரபுத்திரன் இறந்து விட்டார். எனது மகள் தங்கம் மற்றும் 3 குழந்தைகளின் கதி என்னவென்றே தெரியவில்லை.
உயிரோடு இருக்கிறார்களா? இறந்து விட்டார்களா? அல்லது அவளை சித்ரவதை செய்கிறார்களா? என எதுவும் தெரியவில்லை.
இது சம்பந்தமாக நான் பலமறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது மகள் நிலைமை குறித்து அறிவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தாய் கனகம்மாள் அந்த மனுவில் கூறியுள்ளார்.