Ad Widget

பிரபாகரன் படை உருவாவதற்கு தேசிய பாதுகாப்பு அக்கறையின்மையே காரணம் : மஹிந்த

யாழ்ப்பாணத்தில் பிரபாகரன் படை என்ற பெயரில் புதிய குழுக்கள் உருவாவதற்கு தற்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அக்கறையின்மையே காரணம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் நாட்டின் தேசியப் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள மஹிந்த, இதனால் தென்பகுதியிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு சுதந்திரமாக செல்வதற்கு முடியாத நிலமை விரைவில் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே மஹிந்த அரசாங்கத்தின் மீது இந்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருக்கின்றார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் இந்த அரசாங்கம் அக்கறையின்றி இருப்பதால், மிகவும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையிலிருந்து உடனடியாக விலகிக்கொள்ளுமாறு வலியுறுத்தி கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. ”பிரபாகரன் படை” என்ற பெயரில் இந்த எச்சரிக்கை கடிதம் வெளியிட்டிருக்கின்றது. இந்த நிலமைகள் எற்படும் என்பதை முன்கூட்டியே நாம் கூறியிருந்தோம்.

ஆனால் இந்த அரசாங்கம் அவற்றை பொருட்படுத்தாமல், வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை குறைத்தது. பொலிசாரை பலப்படுத்துமாறு விடுத்த கோரிக்கையை நடைமுறைப்படுத்தவில்லை. இவற்றின் விளைவே இவை.

எமது ஆட்சியின் போது வடக்கில் ஏராளமான தமிழ் இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவைக்கு இணைத்துக் கொண்டோம். ஆனால் இன்று அவர்கள் அனைவரையும் பொலிஸ் சேவையிலிருந்து விலகிக்கொள்ளுமாறு கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்றது.

இதன் பின்னணி குறித்து ஆராயாமல் இந்தக் கடிதத்தை வெளியில் கொண்டுவந்தது யார் என்பதை விசாரணை செய்யும் ஒரு நிலமையே இன்று ஏற்பட்டிருக்கின்றது.

தவறொன்று இழைத்தால் தவறை செய்தவர் யார் என்பதையே கண்டுபிடிக்க வேண்டும். அதனைவிடுத்து அந்தத் தவறை வெளியில் கொண்டுவந்தவரை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது. ஆனால் இன்றைய அரசாங்கம் அதனையே செய்துவருகின்றது. தேசிய பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்திக்கொடுத்தோம்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சுதந்திரமாக சென்றுவருவதற்கான நிலமையை நீங்கள் தான் ஏற்படுத்திக் கொடுத்தீர்கள் என்று இங்கு ஒருவர் கூறுகின்றார்.

ஆனால் யாழ்ப்பாணத்திற்கு எத்தனை நாட்களுக்கு சுதந்திரமாக சென்றுவரக்கூடிய நிலமை இருக்கும் என்பதை உறுதியாக கூற முடியாதுள்ளது.

இது ஒரு பாரிய பிரச்சனை. நாட்டை பிளவுபடுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது. இன்று புதிய அரசியல் யாப்பின் ஊடாக நாட்டை பிளவுபடுத்துவதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு இடமளிக்க முடியாது.

அரசாங்கத்தின் இந்த சூழ்ச்சிகள் தொடர்பில் இதனைவிட மக்கள் தெளிவுபெற வேண்டும் என நான் நம்புகின்றேன். இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்ந்தால் நாட்டின் தேசிய பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்பதை இந்த இடத்தில் கூறியே ஆக வேண்டும். அதனால் இந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பு விடையத்தில் இதனைவிட மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை நாம் இந்த அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

Related Posts