யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலிவடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடுகளை கையளிக்கவுள்ளதுடன் வலிவடக்கில் மேலதிகமாக 460ஏக்கர் காணிகளையும் பொதுமக்களிடம் மீள வழங்கவுள்ளார்.
கடந்த 26வருடங்களுக்கு முன்னர் வலிவடக்கு பகுதியில் இருந்து குடாநாட்டில் அப்போது காணப்பட்ட அசாதாரண நிலமையினால் மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக நலன்புரி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியிருந்தனர். இவ்வாறான நிலையில் குறித்த மக்களின் காணிகளானது நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து பகுதி பகுதியாக இராணுவத்திடமிருந்து மீளவும் உரிய மக்களிடம் கையளிக்கப்படு வருகின்றது.
இதன்படி இடம்பெயர்ந்த மக்களில் காணியற்ற மக்களுக்காக மீள்குடியேற்ற அமைச்சின் நிதியுதவியின் கீழ் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான காணியில் இராணுவத்தால் வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த வீடுகளை கடந்த முறை ஜனாதிபதி மக்களுக்கு கையளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் அது சில காரணங்களால் பிற்போடப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே இன்று யாழ்.விஜயம் செய்யும் ஜனாதிபதி குறித்த 100 வீடுகளை உரிய மக்களிடம் கையளிக்கவுள்ளார். அத்துடன் இந்த நிகழ்வுக்கு எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் மீள்குடியேற்ற இந்துமத சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கிணேஸ்வரன் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வேலாயுதம் சிவஞானசோதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் வலிவடக்கில் இராணுவத்திடம் உள்ள பொதுமக்களது காணிகளில் மேலும் 460ஏக்கர் காணிகளை மக்களிடம் மீள கையளிக்கவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வேலாயுதம் சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
இதன்படி தையிட்டி தெற்கு வடக்கு கிழக்கு ஆகிய பகுதிகளில் இருந்தும் மயிலிட்டியில் குறிக்கப்பட்ட சில பகுதிகளையும் காங்கேசன்துறை தெற்கில் குறிக்கப்பட சில பகுதிகளையும் காங்கேசன்துறை மத்தியில் சில பகுதிகளையும் இன்றைய தினம் ஜனாதிபதி பொதுமக்களிடம் மீள கையளிக்கவுள்ளாதக அமைச்சின் செயலாளர் வேலாயுதம் சிவஞானசோதி தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் அண்மையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரையும் சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.